முட்டாளின் வயது 32 ...
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழவேண்டும்...

நான் என் வாழ்வில் என்றுமே மறக்காத கண்ணதாசனின் வைர வரிகள். இந்த வரிகளின் அர்த்தத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும் என்று என்னை ஆசீர்வதித்து இறைவன் இந்த பூமியில் என்னை ஜனிக்கவைத்து இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நான் பெரிதாக எதுவும் என் வாழ்வில் சாதிக்கவில்லை ஆனால் இன்று நான் வாழும் இந்த வாழ்வே, இறைவன் எனக்களித்த பெரிய பிச்சை என்றே சொல்லுவேன். நான் அனுபாவிக்கும் பல சந்தோஷங்கள், என் தகுதிக்கு மேற்பட்டது என்றே எண்ணுகிறேன். அமைதியான வாழ்கை, நிறைவான செல்வம், அன்பான குடும்பம், எதிர்பார்த்த வேலை, பாசமிகு நண்பர்கள், வாழ்வின் இந்த நிறைவோடு, இந்த கணமே மூர்சையாகவும் தயார்.

வாழப்போகும் சொல்ப காலத்திற்கு, என்னை செதுக்கிய இந்த சமுதாயத்திரிக்கு ஏதேனும் நல்லது செய்யா வேண்டும் என்று விரும்புகிறேன், என் மறைவிற்கு பின், வெறும் புகைப்படமாக மாறி, புகை ஏறிய சுவற்றில் தொங்கிக்கொண்டு சிரிப்பதற்கு நான் தயாராக இல்லை, என் பெயர் சொல்லும் விதமாக இந்த சமுதாயத்திற்கு என்னால் இயன்ற சில நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நான் இறைவனிடம் வேண்டும் ஒரே வரம் இது தான், நான் இருக்கும் வரையில், என்ன சுற்றி உள்ள நல்ல உள்ளங்கள் அனைத்தையும், சிரிக்க வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான். கடவுள் மனிதனுக்கு மட்டுமே அள்ளித்தந்த மாபெரும் பரிசு, சிரிப்பு, ஆங்கிலத்தில் "It is not an easy joke" என்பார்கள், சக மனிதனை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமானதொரு செயல், அதுவும் இன்று நாம் வாழும் காலகட்டங்களில், மனிதன் தனக்கிருக்கும் தனித்துவமான அந்த பண்பை மறந்தே போனான் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. நம் வாழ்கை, சவப்பெட்டிகளை விடவும் புழுக்கமாக இருக்கிறது என்பது தான் கசப்பான ஒரு உண்மை.

என்னையும், என் எழுத்துக்களையும் எப்போதும் ஊக்குவிக்கும் என் குடும்பத்தாருக்கும், முக்கியமாக என் நண்பர்களுக்கும், என்னை பார்க்காமலே என் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் என் அருமை வாசகர்களுக்கும் நான் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அனைவரின் தினசரி பிரார்த்தனைகளில் என்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், உங்களின் அன்பும் ஊக்குவிப்பும் இல்லாவிட்டால், நான் இந்த அளவிற்கு என் எழுத்துத்திறனை வளர்த்திருக்க இயலாது.

எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன், என் முதல் தமிழ் இணையதளத்தை துவங்குகிறேன், இதை செய்ய ஏன் என் பிறந்த நாளை தேர்ந்தெடுத்தேன் என்று கேட்கும் உள்ளங்களுக்கு என் பதில் இது தான், நான் பிறந்ததற்கும் ஒரு சாட்சி வேண்டும் அல்லவா ;-) மேலும் பல சுவையான பதிவுகளுடன் உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள வருகிறான், இந்த மைனர்குஞ்சு. வாழ்க்கை என்பது ஒரு காகித கப்பலைப்போன்றது, சோகம், துக்கம், துயரம், கவலை போன்ற பயணிகளை ஏற்றாமல் இருக்கும் வரைத்தான் அது ஆடி ஆடி நீந்திச்செல்லும், அவற்றில் ஒன்றை ஏற்றினாலும், அது மூழ்கிவிடும்.

சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்கவும் வாழவேண்டும் ... சிரியுங்கள், பெரிதாக ஒன்றும் செலவாகாது ... :-)
3 Responses
  1. Chan Says:

    Iniya pirandha naal vaazhthukkal unakkum un puthiya inaya thalathirkkum


  2. Anu Says:

    Ada, thamizh thalam! Vaazthukkal.


  3. Thamizhchuvai site Migavum azhagaaga irukiradhu.. vaazhthukkal.


Post a Comment