ஏகாந்த மலை ...
இந்த உலகத்தின் சலசலப்புகளை தாண்டி பயணிக்க முடிவெடுத்தான் சரவணன், இயற்கையின் மடியல் தவழ்ந்து விளையாட துடித்தது அவன் மனது. கிடைத்ததை உன்று, வானமே கூரை என்ற மனப்பாங்குடன் பயணம் செய்ய முர்ப்பட்டன். அவன் செய்த முதல் நல்ல காரியம், அவனது அலைபேசியை ஒரு பெரிய பாறையின் இடுக்கில் வைத்து நொறுக்கியது, தன்னை இது நாள் வரை கொடுமைப்படுத்திய அலைபேசியை கொன்ற களிப்பு அவன் கண்களில் தெரிந்தது, உலகில் மனித இனமே கண்டிராத ஒரு வனாந்திரத்தை உலக வரை படத்தில் தேடி கண்டுபிடித்தான், அதை நோக்கி தன பயணத்தை தொடர்ந்தான் சரவணன், நகரத்தில் வாழும் அனைத்து மனிதர்களையும் பார்த்து ஒரு ஏளன சிரிப்போடு தன பின் சுமையை தொழில் ஏற்றிக்கொண்டு விடை பெற்றான் அவன் ...

ஐந்து நாட்கள் ரயிலிலும், பேருந்திலும், மாட்டு வண்டியிலும், போடி நடையாகவும், சுற்றி திரிந்து அலைந்த களைப்பில், ஏகாந்த மலையடிவாரத்தை வந்தடைந்தான் சரவணன், இயற்கைத்தாய் அவனை தன இரு கரங்கள் கொண்டு அவனை வாரி அணைப்பது போல் ஒரு பிரமை தோன்றியது. ஏகாந்த மலை அதன் பெயருக்கு ஏற்ப அழகும் அமைதியும் கொண்ட ஒரு மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 10000 அடி உயரத்தில் உள்ள மலை அது, மனித இனம் இன்னும் கண்டறியாத பல அறிய மூலிகை மரங்களும், உலகம் இதுவரை கண்டறியாத பல அறிய வன விலங்குகளும் வாழும் ஒரு இயற்க்கை பொக்கிஷம் அந்த மலை. அந்த மலையை பற்றி எந்த ஒரு தகவலும் வலை தளங்களில் தென்படவில்லை, அதனாலேயே அவன் ஏகாந்த மலைக்கு வர முடிவெடுத்தான். இனி அவனும் அந்த மலையில் உள்ள இனம் புரியாத ஒரு மௌனமும் தான் நமது கதாபாத்திரங்கள்.

கண்ணில் படும் இடங்கள் எல்லாம் பச்சை நிற போர்வை போத்தியது போல் பசுமை அப்பிக்கிடக்கிறது அந்த மலையில், உயரே செல்ல செல்ல ஒரு மென் குளிர் காற்று நம்மை இதமாக கவ்விக்கொள்ளும், மேலே கருமை நிற முகில்கள் தங்களின் பன்நீர்த்துளிகளை எந்நேரமும் தூவிக்கொண்டே நம்முடன் அலைகிறது, கண்களுக்கு மட்டும் அகப்படாமல் பெயர் தெரியாத பல பறவைகள் தங்களின் குரல் வளத்தில் கட்சேரி செய்த வண்ணம் உள்ளன. வழியெங்கும் காய்ந்த சரடுகளும், உதிர்ந்த இலைகளும், நம் கால்களுக்கு மெத்தை போட்டுத்தந்தன, சற்றே அந்த சருகுகளின் அருகில் சென்று பார்த்தல், அதில் தான் எத்தனை எத்தனை பூச்சிகள் வாழுகின்றன ? செந்நிற வண்ணத்தில் கரு நிற புள்ளிகளுடன் ஒன்று, பச்சை நிற தேகத்தில், மஞ்சள் நிற கோடுகளுடன் ஒன்று, ஆரஞ்சு நிற மேனியில் சிகப்பு நிற தூவல்கள் போட்டு ஒன்று, கரு நிற முதுகில் வெள்ளை நிற சாயம் அடித்த ஒன்று, இவையெல்லாம் நாம் வசிக்கும் நரகத்தில் (நகரத்தில்) பார்த்ததே இல்லையே என்ற வியப்பு சரவணின் கண்களில் தெரிந்தது.

இந்த வனத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது, அது அனுபவிக்க மட்டுமே முடிந்த ஒரு அபரிமிதமான அழகு, அது போன்ற அடர்ந்த காட்டில் எவரும் மனம் மயங்கித்தான் போவார்கள். ஒரு நீள ஒத்தையடிப்பாதை இரு பக்கங்களிலும் வாசனை ததும்பும் மலர் சொரிந்த மரங்களும், காதுகளுக்கு ரீங்காரமாய் அதனருகே கேட்கும் எங்கிருந்தோ வழிந்தோடும் ஓடையின் சலசலப்பும், அந்த ஓடை எங்கு உள்ளது என்று நம்மை தேடத்தூண்டும் ஆவலும் அந்த பயணத்தை சுகமாக்கிக்கொண்டே வருகிறது. இறவன் ஒரு சிறந்த ஓவியன் என்பதில் ஐயமே இல்லை தான், அவரது கைவண்ணத்தில் தான் எத்தனை அழகு, எந்த ஒரு ஓவியனும் அவனது கற்பனையில் கூட கூட்ட முடியாத வண்ணங்கள், அந்த வண்ணங்களுக்கு என்ன பெயர் என்றே நமக்கு தெரியாது. ஒரு மரத்தில் பூத்திருக்கும் ஒரு பூவின் வண்ணம் எப்படி இருந்தது என்றால், பூமி தொடாத பிள்ளையின் பாதத்தையும், சிவந்த தேகம் உள்ள ஒரு அழகி சிரிக்கும் பொது வெட்க்கி பொங்கும் அவள் நாசியின் நுனியில் தோன்றும் வண்ணத்தையும் சேர்த்து பிசைந்து, அதை சுற்றி மஞ்சளும், குங்குமமும் கலந்து, மாலை வேளையில் அஸ்தமனமாகும் சூரியனின் கதிர்களை கைக்குள் அடக்கும் பொது தோன்றும் ஒரு வண்ணத்தை இணைத்து ஒன்றுடன் ஒன்றை கலந்தது போல் இருந்தது

சரவணனின் மனது ஒரு பிறந்த கோழிக்குஞ்சின் இரகைப்போல லேசாகி இருந்தது, இந்த வாழ்கை அவன் மனதிற்கு ஏற்படுத்திய ரணங்களில் குளிர்ந்த அமிலத்தை மயிலிறகு கொண்டு பூசுவது போல் தோன்றியது. தனிமையும் ஒரு சுகம் தான், நம்மை நாமே புரிந்து கொள்ளும் தருணங்கள் அவை, வெளி உலகிற்கு நாம் நம் மேல் போட்டுக்கொண்டுள்ள பொய் முகத்தை நாமே கிழித்தெறியும் நேரம் தனிமையில் தான், வெட்கமின்றி பகிரங்கமாக நமக்கே கசக்கும் பல உண்மைகள் நம் முன் தாண்டவமாடும் தருணங்கள் அவை. சரவணின் மனதும் அவனோடு பயணிக்கும் அந்த காட்டின் மௌனமும் பேசிக்கொள்ள துவங்கின. பிறந்து, படித்து, உழைத்து வளர்ந்தது எல்லாம் "சென்னை" என்ற சலசலப்பிற்கு பஞ்சம் இல்லாத ஒரு நகரத்தில். எவ்வளவு தான் சுட்டெரித்தாலும், "இவ்வளவுதானா ?" என்பது போல் சூரியனையே கேலி செய்யும் வெள்லேந்தி மனிதர்கள் வாழுமிடம். ஆண்டி முதல் அரசன் வரை எவரையும் வாழ வைக்கும் ஈரமான பூமி. நாகரீகம் என்ற பெயரில், தன்னைத்தானே சீரழித்துக்கொள்லாத வைராக்கிய இடம். என் போல் பிள்ளை பூச்சிகளை பந்தாடிப்பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்ட ஒரு நகரம்.

வாழ்கை எனும் சக்கரம் சுழல துவங்கி வெகு நாட்கள் ஆகாத ஒரு திருநாளில், துயரத்தின் முதல் தேன் துளி என் மேல் பட்டு சிதறியது, குடும்பத்தின் ஆணிச்சக்கரம் முருங்கிய நாள் அது, அப்படியே அந்த பாரத்தை என் இளம் தோள்களில் வைத்துவிட்டு உன்னுடன் வந்து கலந்தார் என் தந்தை. போராட பயந்தவன் நானில்லை தான் என்றாலும், போராட்டம் நீடித்ததால் மனம் தளர்ந்தேன், துவண்டு போன காலங்களில் தோள் சாய இடமில்லாமல் தலையணைக்குள் சிந்திய கண்ணீர்த்துளிகளை பிழிந்தால் பொங்கிவிடும் வங்கக்கடல். பாழாய்ப்போன வயிற்றையும் அதனுடன் பசி என்ற கொடிய அரக்கனையும் இறைவன் படைத்ததற்காக அவர் மேல் கோபம் கொண்டு கோவிலுக்கு செல்ல மறுத்தவன் நான். பசி என்ற அரக்கன் என்னை சுற்றி இருந்த அனைவரையும் அதன் பசி தீர உண்டு முடித்து, என்னையும் அது விழுங்கும் முன், இதோ உன்னுடன் நான். வாழ்க்கை என்னை துரத்தியதால் நான் உன்னைத்தேடி இங்கு வரவில்லை, என்னை துரத்திய ஒன்றை துரத்திப்பிடிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

இருவரின் உரையாடலையும் ஒரு கணம் கலைத்து விட்டு சென்றது, தூரத்தில் கேட்ட ஒரு யானையின் பிளிறல், அந்த பிளிறல் வந்த திசை நோக்கி கண்களை ஏவ விட்டான் சரவணன், பல மரங்களின் இடுக்கின் வழியாக ஒரு சிறு குட்டை போல தெரிந்தது அந்த ஆறு, அதனருகே நீராடி மகிழ்ந்து கிடந்தது ஒரு யானை குடும்பம். குளிர் காற்றும், அஸ்தமிக்கும் சூரியனும் அந்த காட்டின் அழகை மேலும் கூட்டியிருந்தது, அந்த மஞ்சள் நிற கதிகள் இலைகளின் நடுவே கசியும் அழகை பார்த்து ரசிப்பதற்கு கண் கோடி வேண்டும். அந்த காடுகளில் கரையும் அந்த பசுமை வாசத்தில், நம் நாசிக்குள்ளும் செடிகள் வளரும் பரவசம் ஏற்படுகிறது. அந்தி சாயும் நேரம் என்பதால், பகல் முழுதும் இறை தேடி பறந்து திரிந்த பறவைக்கூட்டங்கள் தங்களின் கூடு நோக்கி சென்று கொண்டிருந்தன. கண்களுக்கு மட்டும் அகப்படாத இசை கலைஞர்கள் அவர்கள். இளையராஜாவும், ஏ ஆர் ரஹ்மானும் இவர்களிகம் கற்றுக்கொள்ள பல ராகங்கள் உள்ளன, அவை எனக்காகவே பாடிக்காட்டியது போல் ஒரு உணர்வு என்னுள்ளே.

அலைந்து திரிந்த களைப்பில், நான் படுத்து உறங்க முடிவெடுத்த இடம் ஒரு கொய்யா பழ மரத்தடியில், நகரத்தில் வாழ்ந்த காலங்களில், உப்பும், மிளகாய்ப்பொடியும் இலாது ஒரு கொயாக்கனியை நான் உண்ட கவனம் எனக்கில்லை. கவனமாக தேடிப்பிடித்து நான் பறித்து ஒரு அணில் கடித்த பழத்தை, அதை கடித்தது அணிலோ, குரங்கோ என்று சரியாக தெரியாது, எனினும், அந்த பழம் வழக்கத்தை விடவும் சுவை மிகுந்ததாகத்தான் இருந்தது, வயிறு முட்ட பழங்கள் உண்ட பரவசத்தில் கண்ணசந்து போனான் சரவணன். வாழ்கையின் கோரப்பிடியில் இருந்து தப்பித்த களிப்பில் மீண்டும் அந்த காட்டின் மௌனத்தை ஆசை தீர அனுபவித்தான் சரவணன், தன்னை வாட்டி எடுத்த வாழ்கையை வென்றுவிட்ட பெருமிதம் அவன் முகத்தில். அந்த வனத்தில் ஈரமில்லாத ஒரு இடத்தை தேடுவது முட்டாள் தனம் என்று தோன்றியது அவனுக்கு. இயற்கை அன்னை அவள் மார்பகத்திலிருந்து வற்றாமல் சுரக்கும் வெண்ணிற அருவியை கண்டான் சரவணன், ஒரு கணம் அந்த பிரம்மிப்பில் தன்னை மறந்தான். நேற்று முதல் அதன் ஒலியை மட்டுமே கேட்ட அவன் காதுகள், இன்று அந்த பிரம்மாண்டத்தை அவன் கண்களும் சுவைத்தது

உலகில் எவரும் இதுவரை அந்த அருவியை கண்டிருக்க இயலாது, ஏன் தெரியுமா ? அங்கு தான் தூக்கி எறியப்பட்ட சந்திரிகா சோப்பு பெட்டிகளோ, மூக்கு வெட்டப்பட்ட ஷாம்பூ கவர்களோ இல்லையே. தானும் இந்த உலகில் ஒன்றை கண்டுபிடித்த சந்தோஷத்தில் தத்தளித்தது அவன் மனது, தன் வாழ்வின் பாவங்களை துடைக்க அதை விட ஒரு சுத்தமான நீர் கங்கையிலும் கிடையாது என்றுணர்ந்து, மூக்கடைத்து அந்த வழுக்கும் பாறைகளில் அமர்ந்து, குளிருக்கு புது விளக்கமளிக்கும் அந்த அருவியில் கண்மூடி கிடந்தான் சரவணன். அவன் வாழ்கையின் முன்னோட்டம் அவன் மனத்திரையில் ஓட துவங்கியது. அவன் பிறந்தது முதல், அவன் வாழ்கை கடந்து வந்த பாதைகளும், அதில் அவனை தீண்டிய கூர் முட்களும் ஒரு திரைப்படமாய் ஓட துவங்கின, அப்பொழுது வீசும் தென்றலாய் அவன் மனத்திரையில் தோன்றினாள் "ரேவதி" அவன் வாழ்வின் ஒரே விடிவெள்ளி, அவனை அவனுக்காக நேசித்த ஒரு ஜீவன், அவளுடன் அவன் வாழ்ந்த வசந்த காலங்களை நினைக்கையில், தண்ணீரின் குளிர் மேலும் அதிகரித்ததை அவனின் நடுங்கும் புஜங்கள் ஊர்ஜீனம் செய்தன

அந்த அருவியின் சாரல்கள் பாறைகளில் தெறித்து வெண் புகையை காற்றில் கலந்தது, அந்த நீர்த்துளிகளின் சிதரளைப்போல ரேவதியின் நினைவும் அவனுள்ளே சிதறிப்போனது அந்த ஒரு சொல் அவன் நினைவில் நுழைந்த பொழுது "சோத்துக்கே வக்கில்லாத உன்ன கட்டிக்கிட்டு என்ன சொகத்த காண போறேன்", அவன் தலையில் விழுந்து கொண்டிருந்த அருவியின் கணத்தை விட அந்த சொல்லின் கணம் அவன் இதயத்தை பிளந்தது, இதுநாள் வரை அவனை துரத்திய அந்த தனிமை எனும் அரக்கனை தேடி, வழுக்கும் பாறைகளில் மெல்ல நடந்து, அருவியின் ஓர் உச்சியில் தன் இரு கைகளையும் விரித்து, தனக்கு சந்தோஷத்தை அளித்த அந்த ஏகாந்த மலைக்கும், அங்கே வாழும் பறவை இனங்களுக்கும், சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு, அருவியின் காற்றோடு ஒன்றாய் கலந்தான் சரவணன், அவனை துரத்திய தனிமையோடு ஒன்றாய் கலந்தது அவன் உயிர். அந்த நிகழ்வையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது ஏகாந்த மலை
என்னுயிர் தோழன் ...
நடை பயின்று சில வருடங்களே ஆன நான், எனது மழலை சொற்களின் சாயலில் இருந்து விடுபடாத நான், பள்ளியில் விட்டுச்சென்ற அன்னையின் முகம் மறைந்தபின், கண்களில் நீர் கோத்த நான், வீடு எனும் கூட்டை விட்டு, வெளியுலகம் என்ற திக்குத்தெரியாத காட்டில் கால் பதித்த நான், அமைதியாக அந்த வகுப்பறையின் ஒரு மூலையில் கண்ணீர் துளிகளுடன் எனது மதிய உணவை வெறித்து பார்க்கையில், என் தோள் உரசி அதே கண்நீர்த்துளியுடன் என் அருகில் வந்தமர்ந்தான் என் தோழன்... நீண்ட இடைவேளைக்குப்பிறகு என் முகம் பார்த்து அவன் சொன்ன முதல் வார்த்தை - "அழாத, நா இருக்கேன் உனக்கு துணையா" அப்பொழுதே என் கண்ணீர்த்துளிகள் காய்ந்து போயின.

அன்னையின் பரிவையும், தந்தையின் உரிமையையும் பிசைந்து செய்த குணம் அவனுடையது, பள்ளிக்கு செல்லவே அடம் பிடத்த நான், பள்ளி இல்லாத நாட்களிலும் பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்க வைத்தது எங்கள் நட்பு. மதிய உணவின் இடைவேளையில் ஒரு நாள், காற்று என் சோற்றின் மீது மண் வாரிப்போட்டது, உடனே தனது வயிற்றை பிடித்துக்கொண்டு ஒவென அவன் போட்ட அலறல் இன்றும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அனைத்தும் அவன் தன் உணவை எனக்கு கொடுப்பதற்காக போட்ட நாடகம், என்னை பசியாற வைத்து, அவன் பசி மறந்த "தாய்" என் நண்பன். கொண்டு சென்ற பலப்பத்தை தொலைத்து அழுத பொழுதுகளில், என் துயர் துடைக்க, கள்வனாகவும் மாறிய வீரன் அவன்.

வீட்டுப்பாடங்களை நான் முடிக்காத பல தருணங்களில், எனக்காக என்னுடன் சேர்ந்து முட்டிக்கால் போட்டவன், வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டும் ஆசிரியையிடம் காட்டாத என் நண்பன், ஏன் என்று விணவிய பொழுது - "நீயில்லாத வகுப்பறை ஒரு சவப்பெட்டி" என்று கூறி, நான் முட்டிக்கால் போடும் இடத்தில் இருக்கும் மண்ணை தன் கையால் சுத்தம் செய்தவன் அவன். வகுப்பில் உள்ள மாணவர்களை குழுக்களாக பிரித்த பொழுது, நீ என் குழுவிற்கு வர வேண்டும் என்பதற்காக உனது பெயரை மாற்றக்கோரி உன் தாயிடம் அழுது அடம் பிடித்தது இன்றும் நினைக்கையில் என்னுள் சிரிப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது.

காலத்தின் மாற்றங்களை எனக்குமுன் கண்டவன் நீ, அதை தான் நான் "பிஞ்சுலேயே பழுத்தவன்" நீ என்று உன்னை கேலி செய்வதுண்டு. நாம் இருவரும் பக்ரிந்த அந்த அந்தரங்கமான விஷயங்கள் தான் எத்தனை எத்தனை, நம் இருவருக்கும் மீசை முளைத்த அந்த தினத்தை ஐயங்கார் பேக்கரியில் எக் பப் வாங்கி கொண்டாடி மக்ழிந்ததை எப்படி மறக்க முடியும். எனது கிரிக்கெட் மோகத்தின் பலியாடு நீ தான் பாவம், பள்ளிக்கூடத்தில் ஸ்பெஷல் க்ளாஸ் என்று கூறி, உன் வீடிற்கு வந்து, ட்ராக்ஸ் உடை மாற்றிக்கொண்டு, மைதானத்திற்கு சென்று விளையாடிவிட்டு வரும் வரையில் உனக்கு உன் வீட்டின் பால்கனிக்கு வர தடா போட்டவன் நான், எனது அதே தெருவில் நீ குடியிருந்ததர்க்காக கொடுத்த கூலி அது. அப்படி விளையாடிவிட்டு வந்து குட்டு வெளிப்பட்டு அகப்பட்ட பல நாட்களுக்கு உன்னுடன் சேர்த்து எனக்கும் சோற்றையும் பாசத்தையும் ஊட்டினாள் நம் அன்னை, உன் அன்னை.

நம் இருவருக்கும் ஒரே கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த அந்த தருணத்தை இன்றும் என் மனதுக்குள் மகிழ்ச்சியுடன் அசை போட்டுக்கொண்டு இருக்கிறேன் நான். நீ வைத்திருந்த அந்த ஸ்ட்ரீட் காட் சைக்கிள் தான் நம் BMW அதில் நாம் மைலாப்பூர், மந்தைவெளி, ஆர் எ புறம் போன்ற இடங்களில் சுத்தித்திருந்த மாலை வேளை பயணங்கள் நம் இருவருக்கும் பிடித்தமான ஒன்று, நம் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று நீயும் நானும் திட்டம் தீட்டிய வாலிபப்பருவம் அது, அந்த திட்டங்களை நாம் இருவரும் நிறைவேற்றிய அந்த 1997 ஆம் ஆண்டு, லஸ் கார்னரில் உள்ள பாம்பே ஹல்வா ஹௌசில் சமோசா வாங்கி இரு துண்டாக பிரித்து நமக்கு ஓட்டிக்கொண்ட காட்சியை படம் பிடித்து வைக்க மறந்தது நம் தவறு தான்.

உனது ப்ராஜெக்ட் ஒன்றின் வேலைக்காக நீ நியூ யார்க் சென்ற பொழுது, என் வாழ்வில் ஒரு சூனியம் உருளுவதை நீ அந்த விமான வரவேற்ப்பறை தாண்டும் வரையில் நான் உணரவில்லை, எனக்காக நீ உனது $40 வருமானத்தில் செய்த தொலைப்பேசி அழிப்புகள் தான் எத்தனை எத்தனை. அதே நியூ யார்க்கில் 2002 ஆம் ஆண்டு, நான் உன்னை JFK விமான நிலையித்தில் சந்தித்த பொழுது, நம் இருவரையும் அறியாமல் வெளியேறிய அந்த கண்ணீர்த்துளியை நாம் நன்றாகவே சமாளித்தோம். நாம் இருவரும் வெளிநாட்டில் சந்தித்த முதல் இரவு அது, நம்முடன் சேர்ந்து நியூ யார்க்கும் அன்று தூங்கவில்லை என்று தான் சொல்லுவேன். நாம் அன்று இரவு பேசிய ரகசிய கனவுகளும், நம் கனவில் வரும் கனவுக்கன்னிகளின் பெயர்களையும், மறந்தும் வெளியே சொல்லிவிடாதே.

பின் குறிப்பு - நம் இருவரின் கனவுக்கன்னி "வயகரா" வை இந்த முறை அமெரிக்க சென்ற பொழுது கன்சாஸ் சிட்டியில் பார்த்தேன், இப்பொழுது அவளுக்கு நான் பெயர் வைக்க வேண்டும் என்றால் "வயசான" கரா" என்று தான் வைக்க வேண்டும், வேணாம் மச்சி, அது இப்போ ரொம்பவே மோசமா இருக்கு பார்கறதுக்கு, அவளின் குழந்தைகள் இருவரும் அழகு.

உன் போன்ற ஒரு நண்பன் எனக்கு கிடைத்தது என் வாழ்வின் வரம், என் அன்னையின் மறைவிற்கு பின், நீ என்னுடன் இருந்த நாட்கள், என் தாய் என்னுடன் இருப்பதை போன்று தோன்ற வைத்தது. உன் அன்னைக்கு என் உயிர் உள்ளவரை என்றும் நான் கடமைப்பட்டுளேன், அவர்களின் அன்பும், கண்டிப்பும், என்னை செதுக்கியதில் பெரும்பங்கு வகிக்கும். இன்று நம் இருவரின் அன்னையரும் விண்ணிலிருந்து நம்மை ஆசீர்வதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், அதனால் தான், நாம் இருவரும் இன்று வாழ்வின் பல சிகரங்களை தொட துணை புரிந்துள்ளது. உன் பெயரை வெளியிடாமலே இது உனக்கான பதிவு என்று நீ புரிந்து கொள்வாய் என்று எனக்கு தெரியும். என்னை எனக்கு மேல் புரிந்து கொண்டவன் நீயாயிற்றே.

மைலாப்பூரில் உள்ள அந்த பள்ளியின் 1B வகுப்பறையில் உள்ள கடைசி மர பெஞ்ச் சொல்லுமடா, நாம் இருவரும் தண்ணீரில் நனைத்த சாக் பீஸ் கொண்டு அதனடியில் எழுதிய நம் நட்பின் வாசகத்த. காலங்களும் தூரங்களும் நம் இருவரையும் தற்காலிகமாக பிரித்து விட்டது நண்பா, காலத்தின் தீர்ப்பு மாறும் என்றால், மீண்டும் உன்னோடு சேர்ந்து அதே 1B வகுப்பறையின் மர பெஞ்சில் ஒரு நிமிடம் வாழ வேண்டும், நம் இருவரின் நட்பு துவங்கிய அந்த 1981 ஆம் ஆண்டிற்கு நாம் இருவரும் செல்ல வேண்டும், மறக்காமல் மதிய உணவிற்கு அதே தோசையும், அதனுடன் நீ என்மீது வைத்திருக்கும் ஆசையும் அள்ளித்தர நீ வருவாயா ?

என் சகோதரி சுமித்ராவிற்கும், என் உயிரினும் மேலான செல்ல குட்டி தீபிகாவிற்கும் இந்த தொகுப்பை படித்து காட்டு. நம்மை பொருத்த வரை வருடத்தின் எல்லா நாடக்களும் நண்பர்கள் தினம் தான், ஆனால், இந்த முறை, உனக்காக இந்த சிறப்பு பதிவை சமர்ப்பிக்கிறேன். எந்த குறையுமின்றி, நீடூடி வாழவேண்டும் நீ.

இப்படிக்கு உன் உயிர் நண்பன்
- பாஷா
ஆள் மாறாட்டம் ...
நம்ப IT இண்டஸ்ட்ரி ல, இன்டெர்வியு அட்டென்ட் பண்ணறது ஒரு ஆளு, வேலைக்கு வரது ஒரு ஆளு, இது சர்வ சாதாரணமா நடக்கற ஒரு விஷயம். அந்த மாதிரி ஒரு ஆள் மாறாட்டம் ஒரு IT கம்பெனி ல நடந்தா எப்படி இருக்கும் நு ஒரு கற்பனை, இதுல என்ன விசேஷம் நு கேட்கறீங்களா ? இருக்கே ... ப்ராஜெக்ட் மேனேஜர் போஸ்ட்டுக்கு ஆள் மாறி வந்தது வேற யாரும் இல்ல, சுடுகாட்டுல வெட்டியானா வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு ஆளு தான் ஜாயின் பண்ணிருக்காரு, அவருக்கும் HR க்கும் நடக்கற ஒரு டிஸ்கஷன் தான் இப்போ நீங்க படிக்க போறது ...

HR: வாங்க வாங்க, வெல்கம் டு "கில்மாசிஸ்", உங்க பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு ?

வெட்டி: என்ன சார் பிரயாணம், வாழ்கையே ஒரு மயானம், நம்ப எல்லாம் வெறும் உடல் தான்

HR: உங்க சாலரிய பத்தி டிஸ்கஸ் பண்ண தான் உங்கள இங்க வர சொன்னோம், நீங்க ஒப்பெனா பேசலாம், எதையும் மூடி மறைக்க வேண்டாம், ஒகே வா ?

வெட்டி: ஒப்பெனா வெச்சா நாறிடும் சார், மூடி மறைச்சு, அப்பொறம் எரிச்சுடனும். ஐ மீண், சாலரிய ஒப்பெனா வெளிய சொன்னா நாறிடும் நம்ப நிலைமை, அதை மூடி மறைச்சாத்தான், பொறாமைங்கற ஆவிய எரிக்க முடியும்.

HR: வெல் செட், இந்த பக்குவம் யாருக்கு இருக்கு நம்ப இண்டஸ்ட்ரி ல சொல்லுங்க. நீங்க என் கண்ண தொறந்துட்டீங்க.

வெட்டி: எல்லார் கண்ணையும் மூடறது தான் என் வேலையே, ஐ மீண், அறியாமைங்கர கண்ண சொன்னேன்.

HR: சாலரி டிஸ்கஸ் பண்ணறத்துக்கு முன்னாடி உங்களோட ஜாப் எக்ஸ்பீரியன்ஸ் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும், உங்களோட பீப்பிள் மானேஜ்மென்ட் ஸ்கில்ஸ், டெலிவரி மானேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இதப்பத்தியெல்லாம் கொஞ்சம் பேசலாமா ?

வெட்டி: என்ன பொருத்தவரைக்கும் எல்லாரும் "பாடி" தான், ஐ மீண், நான் எல்லாரையும் பாடி லாங்குவேஜ் வெச்சு தான் ஹாண்டில் பண்ணுவேன் நு சொல்ல வந்தேன்

HR: ரொம்ப வித்யாசமா இருக்கே, அது எப்படி நு கொஞ்சம் சொல்லுங்களேன்.

வெட்டி: பாடி லாங்குவேஜ் நா, ஒரு சில பாடி தெலுங்கு பாடியா இருக்கும், ஒரு சிலது தமிழ் பாடியா இருக்கும், பட் ஹாண்டில் பண்ணற ஸ்டைல் ஒன்னு தான். சில பேர அடக்கணும், சில பேர எரிக்கணும்

HR: அடக்கணும் ஒகே, பட் ஏன் எரிக்கணும் ? புரியலையே...

வெட்டி: ஐ மீண், அவங்களோட ஈகோவ எரிக்கணும் நு சொல்ல வந்தேன்

HR: ப்ராஜெக்ட் நா, ஆயிரம் பிரச்னை வரும், உதாரணத்துக்கு, திடீர்னு ஒரு எம்ப்ளாயியோட சொந்தக்காரங்க செத்து போய்டாங்க நு வைங்க, அவருக்கு 10 நாள் லீவ் தரனும், ஆனா ப்ராஜெக்ட் டெட் லைன் அதுக்கு இடம் குடுக்கல, இந்த மாதிரி இக்கட்டான சிச்சுவேஷன எப்படி ஹாண்டில் பண்ணுவீங்க

வெட்டி: இப்போ தான் நீங்க என் லைனுக்கு வந்துருக்கீங்க, குட் கொஸ்டின். மொதல்ல செத்தது அவரோட நெருங்கிய சொந்தமானு பார்க்கணும், பொதுவா எங்க இண்டஸ்ட்ரி ல, அப்பா / அம்மா நா 10 நாளு, மாமா / மாமி / சித்தப்பா / சிட்டி / தாத்தா / பாட்டி இப்படி யாராவது நா 3 நாளு, முன்ன மாதிரி இல்லையே இப்போ, டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துருக்கே, ஜஸ்ட் ஒரு பட்டன் அமுக்கினா போதும், காத்தா போய்டுமே . நா என் கரியர ஆரம்பிச்சபோ தோன்டனும், வெட்டனும், மடக்கனும், புதைக்கணும் இல்லாட்டி எரிக்கணும்.

HR க்கு "இப்பவே கண்ண கட்டிடுச்சு", ஒண்ணுமே புரியல ...

வெட்டி: என்ன முழிக்கறீங்க, எந்த லைப்ரரி ல என்ன புக் இருக்கு நு தோன்டனும், அந்த புக் ல படிச்சா விஷயத்த அழகா வெட்டனும், அதை அப்படியே பாக்கெட் உள்ள மடக்கனும், உங்க மூளைங்கர சுரங்கத்துல புதைக்கணும், அறிவுத்தீய எண்ணெய் ஊத்தி எரிக்கணும் நு சொல்ல வந்தேன். இப்போ அப்படி இல்லையே, எது வேணும்னாலும், இன்டர்நெட் ல ஒரு பட்டன அமுக்கினாலே தெரிஞ்சுக்கலாமே. இப்படி எல்லா துறையும் வளர்ந்துகிட்டு வரும் போது, அதிக நாள் லீவ் போடறது தப்பு. க்ரிஷ்ணம்மாபேட்டை நா அரை நாள் லீவ், கண்ணம்மாபேட்டை நா 1 நாள் லீவ், அது தான் என் பாலிசி

HR: இதுவரைக்கும் எவ்வளோ டெலிவரி பண்ணிருப்பீங்க உங்க காரியர் ல ?

வெட்டி: டெலிவரி எல்லாம் நா ஹாண்டில் பண்ணறது இல்ல, பைனல் டெலிவரி மட்டும் தான் என் கன்ட்ரோல் ல இருக்கும்.

HR: டெட் லைன் எல்லாம் எப்படி மீட் பண்ணுவீங்க ?

வெட்டி: அடுத்தவங்க டெட் லைன் மீட் பண்ணினாதானே எனக்கு வேலையே. சில ப்ராஜெக்ட் சீக்கரம் டெட் லைன் மீட் பண்ணும், ஒரு சில ப்ராஜெக்ட் இழுத்துகிட்டே போகும்.

HR: இழுத்துகிட்டே ஒரு ப்ராஜெக்ட் போச்சுனா நீங்க என்ன பண்ணுவீங்க ?

வெட்டி: என்ன பண்ணுவேன், வெட்டி வெச்சுட்டு உட்காந்துகிட்டு இருப்பேன், ஐ மீண், ஒரு நல்ல பிளான் வெட்டி வெச்சுட்டு வெயிட் பண்ணுவேன். பேசிக்கல்லி ஐ யாம் எ ஹான்ஸ்-ஆன் பெர்சன், இழுத்துகிட்டு இருக்கற நிறைய ப்ராஜெக்ட்ட நானே என் கையால முடிச்சு வெச்ச சம்பவங்களும் உண்டு.

HR: உங்க தொழில்ல டென்ஷன், பிரஷர் எல்லாம் உண்டு, அதை எப்படி நீங்க ஹாண்டில் பண்ணுவீங்க ? வொர்க் - லைப் பாலன்ஸ் எப்படி மைண்டைன் பண்ணுவீங்க ?

வெட்டி: நா தொழிலுக்கு கெளம்பறதுக்கு முன்னாடி, ராவா ஒரு புல் அடிச்சுட்டு தான் போவேன், அப்படி போனாத்தான் மைண்டும், பாடியும் தெம்பா இருக்கும்.

HR: அருகம்புல் ஜூஸ் பத்தி தானே சொல்லறீங்க ? ஐ கேன் ரீட் யுவர் மைண்ட் நௌ

வெட்டி: HR நு நீங்க ப்ரூவ் பண்ணிட்டீங்க.

HR: உங்கள நாங்க டெலிவரி ஹெட் ஆ அப்பாயிண்ட் பண்ணலாம் நு இருக்கோம், உங்கள்ளுக்கு ஓகே தானே ?

வெட்டி: ஹெட், கை, கால் நு பிரிச்சு பார்கற ஆள் நா இல்ல, என்ன பொருத்த வரைக்கும் அது ஒரு பாடி, அவ்வளோதான். எப்போ வெட்டனும், எப்போ தூக்கணும், எப்போ ஊதணும் நு சொல்லிட்ட போதும், மிச்சத்த நா பார்த்துக்குவேன்.

HR: அதாவது இந்த கம்பெனி ங்கற பாடிய, ஷார் ஷார் ஆ வெட்டி, இப்போ இருக்கற நிலமைலேர்ந்து தூக்கி, முன்னேற்றத்துக்கு ஊதி தள்ளிடுவீங்க நு தானே சொல்ல வரீங்க ?

வெட்டி: மறுபடியும் யு ஹாவ் ரெட் மை மைண்ட்

HR: ஓகே சார், உங்களுக்கு 1C ஒகே வா ?

வெட்டி: இந்த காலத்துல யார் சார் 1C வெக்கறாங்க, மினிமம் 5C தான் வெக்கறாங்க ?

HR சொல்லறது 1 கோடி, நம்ப வெட்டி நெனச்சுகிட்டு இருக்கறது 1 ருபீ காயின் (1 C)

HR: 5C ரொம்ப ஜாஸ்த்தி சார், அவ்வளோ எங்களால குடுக்க முடியாது.

வெட்டி: கவலை படாதீங்க, சந்தனம் / குங்குமம் செலவு என்னோடது

HR: சந்தன குங்குமமா ? அது எதுக்கு ?

வெட்டி: என்ன அப்படி கேட்டுடீங்க ? அப்போ தானே எந்த காயினா இருந்தாலும் ஓட்டும்

HR: காயினா ?

வெட்டி: ஆமாம், நீங்க எப்படியும் அஞ்சு ரூபா காயின் நெத்தில வெச்சுதானே ஆகணும்

HR: நெத்தில அஞ்சு ரூபா காயினா ? மிஸ்டர் என்ன உளறறீங்க ?

வெட்டி: உங்க வழக்கப்படி நெத்தில காயின் வெக்க மாட்டீங்களா ? அப்போ மையாவது வைங்க

HR: அய்யோ நீங்க என்ன பேசறீங்க நே புரியலையே ?

இப்போ புரியுதா நு பாருங்க என்று, நம்ப வெட்டி தான் கையேடு கொண்டு வந்த சங்கையும், தட்டியையும் இணைத்து, கையில் வைத்திருந்த குச்சியால் ... போம்ம்ம் டிங் டிங் டிங் டிங் ... போம்ம்ம் டிங் டிங் டிங் டிங் என வாசிக்க, HR மயங்கி விழுந்தார்.