என்னுயிர் தோழன் ...
நடை பயின்று சில வருடங்களே ஆன நான், எனது மழலை சொற்களின் சாயலில் இருந்து விடுபடாத நான், பள்ளியில் விட்டுச்சென்ற அன்னையின் முகம் மறைந்தபின், கண்களில் நீர் கோத்த நான், வீடு எனும் கூட்டை விட்டு, வெளியுலகம் என்ற திக்குத்தெரியாத காட்டில் கால் பதித்த நான், அமைதியாக அந்த வகுப்பறையின் ஒரு மூலையில் கண்ணீர் துளிகளுடன் எனது மதிய உணவை வெறித்து பார்க்கையில், என் தோள் உரசி அதே கண்நீர்த்துளியுடன் என் அருகில் வந்தமர்ந்தான் என் தோழன்... நீண்ட இடைவேளைக்குப்பிறகு என் முகம் பார்த்து அவன் சொன்ன முதல் வார்த்தை - "அழாத, நா இருக்கேன் உனக்கு துணையா" அப்பொழுதே என் கண்ணீர்த்துளிகள் காய்ந்து போயின.

அன்னையின் பரிவையும், தந்தையின் உரிமையையும் பிசைந்து செய்த குணம் அவனுடையது, பள்ளிக்கு செல்லவே அடம் பிடத்த நான், பள்ளி இல்லாத நாட்களிலும் பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்க வைத்தது எங்கள் நட்பு. மதிய உணவின் இடைவேளையில் ஒரு நாள், காற்று என் சோற்றின் மீது மண் வாரிப்போட்டது, உடனே தனது வயிற்றை பிடித்துக்கொண்டு ஒவென அவன் போட்ட அலறல் இன்றும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அனைத்தும் அவன் தன் உணவை எனக்கு கொடுப்பதற்காக போட்ட நாடகம், என்னை பசியாற வைத்து, அவன் பசி மறந்த "தாய்" என் நண்பன். கொண்டு சென்ற பலப்பத்தை தொலைத்து அழுத பொழுதுகளில், என் துயர் துடைக்க, கள்வனாகவும் மாறிய வீரன் அவன்.

வீட்டுப்பாடங்களை நான் முடிக்காத பல தருணங்களில், எனக்காக என்னுடன் சேர்ந்து முட்டிக்கால் போட்டவன், வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டும் ஆசிரியையிடம் காட்டாத என் நண்பன், ஏன் என்று விணவிய பொழுது - "நீயில்லாத வகுப்பறை ஒரு சவப்பெட்டி" என்று கூறி, நான் முட்டிக்கால் போடும் இடத்தில் இருக்கும் மண்ணை தன் கையால் சுத்தம் செய்தவன் அவன். வகுப்பில் உள்ள மாணவர்களை குழுக்களாக பிரித்த பொழுது, நீ என் குழுவிற்கு வர வேண்டும் என்பதற்காக உனது பெயரை மாற்றக்கோரி உன் தாயிடம் அழுது அடம் பிடித்தது இன்றும் நினைக்கையில் என்னுள் சிரிப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது.

காலத்தின் மாற்றங்களை எனக்குமுன் கண்டவன் நீ, அதை தான் நான் "பிஞ்சுலேயே பழுத்தவன்" நீ என்று உன்னை கேலி செய்வதுண்டு. நாம் இருவரும் பக்ரிந்த அந்த அந்தரங்கமான விஷயங்கள் தான் எத்தனை எத்தனை, நம் இருவருக்கும் மீசை முளைத்த அந்த தினத்தை ஐயங்கார் பேக்கரியில் எக் பப் வாங்கி கொண்டாடி மக்ழிந்ததை எப்படி மறக்க முடியும். எனது கிரிக்கெட் மோகத்தின் பலியாடு நீ தான் பாவம், பள்ளிக்கூடத்தில் ஸ்பெஷல் க்ளாஸ் என்று கூறி, உன் வீடிற்கு வந்து, ட்ராக்ஸ் உடை மாற்றிக்கொண்டு, மைதானத்திற்கு சென்று விளையாடிவிட்டு வரும் வரையில் உனக்கு உன் வீட்டின் பால்கனிக்கு வர தடா போட்டவன் நான், எனது அதே தெருவில் நீ குடியிருந்ததர்க்காக கொடுத்த கூலி அது. அப்படி விளையாடிவிட்டு வந்து குட்டு வெளிப்பட்டு அகப்பட்ட பல நாட்களுக்கு உன்னுடன் சேர்த்து எனக்கும் சோற்றையும் பாசத்தையும் ஊட்டினாள் நம் அன்னை, உன் அன்னை.

நம் இருவருக்கும் ஒரே கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த அந்த தருணத்தை இன்றும் என் மனதுக்குள் மகிழ்ச்சியுடன் அசை போட்டுக்கொண்டு இருக்கிறேன் நான். நீ வைத்திருந்த அந்த ஸ்ட்ரீட் காட் சைக்கிள் தான் நம் BMW அதில் நாம் மைலாப்பூர், மந்தைவெளி, ஆர் எ புறம் போன்ற இடங்களில் சுத்தித்திருந்த மாலை வேளை பயணங்கள் நம் இருவருக்கும் பிடித்தமான ஒன்று, நம் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று நீயும் நானும் திட்டம் தீட்டிய வாலிபப்பருவம் அது, அந்த திட்டங்களை நாம் இருவரும் நிறைவேற்றிய அந்த 1997 ஆம் ஆண்டு, லஸ் கார்னரில் உள்ள பாம்பே ஹல்வா ஹௌசில் சமோசா வாங்கி இரு துண்டாக பிரித்து நமக்கு ஓட்டிக்கொண்ட காட்சியை படம் பிடித்து வைக்க மறந்தது நம் தவறு தான்.

உனது ப்ராஜெக்ட் ஒன்றின் வேலைக்காக நீ நியூ யார்க் சென்ற பொழுது, என் வாழ்வில் ஒரு சூனியம் உருளுவதை நீ அந்த விமான வரவேற்ப்பறை தாண்டும் வரையில் நான் உணரவில்லை, எனக்காக நீ உனது $40 வருமானத்தில் செய்த தொலைப்பேசி அழிப்புகள் தான் எத்தனை எத்தனை. அதே நியூ யார்க்கில் 2002 ஆம் ஆண்டு, நான் உன்னை JFK விமான நிலையித்தில் சந்தித்த பொழுது, நம் இருவரையும் அறியாமல் வெளியேறிய அந்த கண்ணீர்த்துளியை நாம் நன்றாகவே சமாளித்தோம். நாம் இருவரும் வெளிநாட்டில் சந்தித்த முதல் இரவு அது, நம்முடன் சேர்ந்து நியூ யார்க்கும் அன்று தூங்கவில்லை என்று தான் சொல்லுவேன். நாம் அன்று இரவு பேசிய ரகசிய கனவுகளும், நம் கனவில் வரும் கனவுக்கன்னிகளின் பெயர்களையும், மறந்தும் வெளியே சொல்லிவிடாதே.

பின் குறிப்பு - நம் இருவரின் கனவுக்கன்னி "வயகரா" வை இந்த முறை அமெரிக்க சென்ற பொழுது கன்சாஸ் சிட்டியில் பார்த்தேன், இப்பொழுது அவளுக்கு நான் பெயர் வைக்க வேண்டும் என்றால் "வயசான" கரா" என்று தான் வைக்க வேண்டும், வேணாம் மச்சி, அது இப்போ ரொம்பவே மோசமா இருக்கு பார்கறதுக்கு, அவளின் குழந்தைகள் இருவரும் அழகு.

உன் போன்ற ஒரு நண்பன் எனக்கு கிடைத்தது என் வாழ்வின் வரம், என் அன்னையின் மறைவிற்கு பின், நீ என்னுடன் இருந்த நாட்கள், என் தாய் என்னுடன் இருப்பதை போன்று தோன்ற வைத்தது. உன் அன்னைக்கு என் உயிர் உள்ளவரை என்றும் நான் கடமைப்பட்டுளேன், அவர்களின் அன்பும், கண்டிப்பும், என்னை செதுக்கியதில் பெரும்பங்கு வகிக்கும். இன்று நம் இருவரின் அன்னையரும் விண்ணிலிருந்து நம்மை ஆசீர்வதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், அதனால் தான், நாம் இருவரும் இன்று வாழ்வின் பல சிகரங்களை தொட துணை புரிந்துள்ளது. உன் பெயரை வெளியிடாமலே இது உனக்கான பதிவு என்று நீ புரிந்து கொள்வாய் என்று எனக்கு தெரியும். என்னை எனக்கு மேல் புரிந்து கொண்டவன் நீயாயிற்றே.

மைலாப்பூரில் உள்ள அந்த பள்ளியின் 1B வகுப்பறையில் உள்ள கடைசி மர பெஞ்ச் சொல்லுமடா, நாம் இருவரும் தண்ணீரில் நனைத்த சாக் பீஸ் கொண்டு அதனடியில் எழுதிய நம் நட்பின் வாசகத்த. காலங்களும் தூரங்களும் நம் இருவரையும் தற்காலிகமாக பிரித்து விட்டது நண்பா, காலத்தின் தீர்ப்பு மாறும் என்றால், மீண்டும் உன்னோடு சேர்ந்து அதே 1B வகுப்பறையின் மர பெஞ்சில் ஒரு நிமிடம் வாழ வேண்டும், நம் இருவரின் நட்பு துவங்கிய அந்த 1981 ஆம் ஆண்டிற்கு நாம் இருவரும் செல்ல வேண்டும், மறக்காமல் மதிய உணவிற்கு அதே தோசையும், அதனுடன் நீ என்மீது வைத்திருக்கும் ஆசையும் அள்ளித்தர நீ வருவாயா ?

என் சகோதரி சுமித்ராவிற்கும், என் உயிரினும் மேலான செல்ல குட்டி தீபிகாவிற்கும் இந்த தொகுப்பை படித்து காட்டு. நம்மை பொருத்த வரை வருடத்தின் எல்லா நாடக்களும் நண்பர்கள் தினம் தான், ஆனால், இந்த முறை, உனக்காக இந்த சிறப்பு பதிவை சமர்ப்பிக்கிறேன். எந்த குறையுமின்றி, நீடூடி வாழவேண்டும் நீ.

இப்படிக்கு உன் உயிர் நண்பன்
- பாஷா
3 Responses
  1. Chan Says:

    யாருடைய நட்பினை பற்றி படிக்கும் பொழுதும், எங்கிருந்தாவது ஒரு நொடியில் நம் நட்பும் சேர்ந்தே விடுகிறதே...அது தான் நட்பின் மகத்துவம்...அருமையான பதிவு நண்பா...


  2. PM Says:

    I envy your friendship. A bit jealous too. Nice writing.


  3. Anonymous Says:

    நீயில்லாத வகுப்பறை ஒரு சவப்பெட்டி" என்று கூறி, நான் முட்டிக்கால் போடும் இடத்தில் இருக்கும் மண்ணை தன் கையால் சுத்தம் செய்தவன் அவன். romba romba nala erku and romba pooramaya eruku(ur friendship)


Post a Comment