Showing posts with label உளறல்கள். Show all posts
Showing posts with label உளறல்கள். Show all posts
காரணம் ஆயிரம் ...
இந்த "வாரணம் ஆயிரம்" படத்துல "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" நு ஒரு பாட்டு உண்டு, அதே பாட்ட, இந்த ஐ டி இண்டஸ்ட்ரீ ல கஷ்ட படர ஒரு கடை நிலை ஊழியன் பாடினா எப்படி பாடிருப்பான் நு ஒரு கற்பனை ... தயவு செஞ்சு அதே மெட்டுடன் பாடி பார்க்கவும் ...

ப்ராஜெக்ட்டில் வெடித்திடும் எரிமலை ...
ரிக்குவயர்மென்ட் எதுவுமே புரியலை ...
ப்ராஜெக்ட் மேனேஜர் டார்ச்சர் தாங்கலை ...
எந்த சப்ப பிகருக்கும் நான் ஏங்கலை ...

இந்த வருஷமும் ஹைக்கு குடுக்கலை ...
வேற எங்கயும் எனக்கு ஆபர் கிடைக்கலை ...
ஐ டி தொழில் சுத்தமா எனக்கு புடிக்கலை ...
கொஞ்ச நேரம் கேளுங்க என் பொலம்பலை ...

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ...
காபிடீரியா சாப்பாடு சாப்ட்டு ஒரே வாந்தி ....
ஏன் தின்றாய் தின்றாய் அத போயி
ரெண்டு நாளா வரல எனக்கு ஆயி ...

[ப்ராஜெக்ட்டில் வெடித்திடும் எரிமலை ...]

மீட்டிங் வைத்து கழுத்தை அறுக்க ...
ஸ்டேட்டஸ் அப்டேட் கொடுத்து தொலைக்க ...
மூளை மட்டும் துளியும் இல்லா ....
மேனேஜர் தான் எனது பில்லா ...
அது நின்ற இடம் என்றால் அழுக்கேறி போகாதோ ...
அது செல்லும் வழியெல்லாம் துர்நாற்றம் வீசாதோ ...
நீ எப்போ போவாய் சுடுகாடு வரைக்கும் ....
அன்னிக்கு தான் என் நெஞ்சம் இனிக்கும் ...

இந்த ப்ராஜெக்ட் எனக்கு பிடிக்காதே ...
எனக்கு ப்ரமோஷன் குடுக்கறா மாதிரி நடிக்காதே
நீ நாயோ பேயோ தெரியாதே ...
உனக்கு எதுக்குடா தரனும் மறியாதே ...

[ப்ராஜெக்ட்டில் வெடித்திடும் எரிமலை ...]

தூக்கங்களை மாற்றி விட்டாய் ...
ஒரு கூர்க்கா போல சுற்ற விட்டாய் ...
கான்பிரன்ஸ் காலில் நீ பேசும் நேரம் ...
டீமின் மானம் கப்பல் ஏறும் ....
நிறுத்து என்று உனை சொன்னால் ...
உன்னால முடியாதே ...
ஒரு நாளும் உனை நம்பி ...
லீவ் போடா இயலாதே ...
எச் 1 என் 1 உனக்கு வரட்டும் ...
உன் சம்பளத்தை எனக்கு தரட்டும் ...

நீ லூசாவே தான் பிறந்தாயோ ...
என்று தோன்றும் நேரம் இதுதானோ
அப்பரைசல் மட்டும் இல்லாட்டி ...
உனக்கு குடுத்துருப்பேண்டி டக்கால்ட்டி ...

[ப்ராஜெக்ட்டில் வெடித்திடும் எரிமலை ...]
கொலு ...
கொலு - தமிழ் பண்டிகைகள் ல ஒரு முக்கியமான ஒரு பண்டிகை, அதுவும் என்ன மாதிரி மைலாப்பூர் ல பொறந்து வளர்ந்த ஒரு ஆசாமிக்கு கொலு வந்தாலே சந்தோஷம் தான், அப்போ தான் அழகழகான ஐயர் ஆத்து பொண்ணுங்க கண்ணுக்கு குளிர்ச்சியா தழைய தழைய புடவைய கட்டிண்டு எங்க வீட்டுக்கு அழைக்க வருவாங்கங்கர ஒரு காரணத்துக்காக மட்டும் இல்ல, கொலு பொம்மை, கொலு படி, வகை வகையா சுண்டல், லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் வீட்டுக்கு வர மாமி / பொண்ணுங்க பாடற பாட்டு. அது என்னமோ தெரியாது, இந்த கொலு நேரத்துல தான் அவங்க அவங்களுக்குள்ள ஒளிஞ்சிண்டு இருக்கற சுசீலா, ஜானகி, சித்ரா எல்லாரும் வெளிய வந்து எட்டிப்பார்பாங்க, ஆனா உண்மைய சொல்லணும் நா, நிறைய மாமி / ஐயர் ஆத்து பிகர்ஸ் ரொம்ப நல்லாவே பாடுவா, நா சில டைம் நினைச்சதுண்டு, இவாலாம் ஏன் சினிமா கு பாட போகல நு, ஆனா அதே சமயம், இவாள ஏன் டா பாட சொன்னோம் நு வருத்த பட வெக்கற அளவுக்கும் சில பேர் பாடி நம்பல டார்ச்சர் போடுவா. இப்படி ஒரு அருமையான கொலு நேரத்துல நடந்த ஒரு மகா காமெடி மேட்டர் ஒன்ன தான், நா இப்போ உங்களுக்கு சொல்ல போறேன், இத ஏன் தமிழ் ல எழுத முடிவு பண்ணினேன் நா, இத இங்கிலீஷ் ல சொன்ன, சொதப்பலா இருக்கும், ஏன்னா எல்லாமே ஐயர் ஆத்து பாஷை ல சொன்னா தான் என்ஜாய் பண்ண முடியும் ...

நா பொறந்தது, வளர்ந்தது, படிச்சது, ஏன் வேலைக்கு போனது கூட மைலாப்பூர் சுத்து வட்டாரத்துல தான். மைலாப்பூர் மாட வீதி பக்கத்துல தான் எங்க வீடு, ஆத்துலேர்ந்து கல்லு விட்டு எரிஞ்சா கபாலீஸ்வரர் கோவில். இந்த கொலு டைம் ல, மைலாப்பூர் குளத்த சுத்தி எக்கச்சக்க பொம்மை கடை வெச்சுருப்பா, அந்த சமயத்துல மைலாப்பூர்க்கு இருக்கற ஒரு எலெக்ட்ரிக் அட்மாஸ்பியர் வேற எப்பவும் இருக்காது. மைலாப்பூர் எப்பவுமே பண்டிகை காலங்கள் ல அருமையா இருக்கும், திரும்பவும் சொல்லறேன், மைலாப்பூர் ஐயர் ஆத்து பொண்ணுங்கள சைட் அடிக்கணும் நா, பண்டிகை டைம் ல தான் அடிக்கணும். சப்ப பிகர் கூட புடவை கட்டினா, சட்டு நு ஒரு பக்கம் திரும்பி பார்க்க தோணும், நம்ப பேசிக்காவே காஞ்சு போயிருக்கோம்ங்கறது உண்மைனாலும், நா இப்போ சொன்னது சத்தியமா பொய் இல்ல. எங்காத்துல கொலு நு சொன்ன அது நித்திய கொலு தான், எங்க அப்பா ஒரு ஷோகேஸ் ல பெர்மனென்ட் ஆ லைட் எல்லாம் செட் பண்ணி பொம்மை எல்லாம் அடுக்கியே வெச்சுருப்பா, ஆனா எங்காத்து கொலு ல ஹைலைட் என்ன நா, அது நாங்க விடற "மின்சார ரயில்". எங்க அத்திம்பேர் ஆத்துலேர்ந்து அதை தூக்கிண்டு வந்து, தண்டவாளம் எல்லாம் செட் பண்ணி, அதுக்கு கனெக்க்ஷன் குடுக்கறது இந்த அம்பியோட வேலை.

நெஜமாவே அது ஒரு சூப்பர் ட்ரைன், நிஜம் கரண்ட் ல ஓடற ஒரு பொருள். அது கூட ஒரு நிஜம் ரயில்வே ஸ்டேஷன் ல என்னல்லாம் இருக்குமோ அதனை பொருளும், அதோட சின்ன சைஸ் ல குடுத்துருப்பான். நீங்க அதா செட் பண்ணி முடிச்சா ஒரு சின்ன ரயில்வே ஸ்டேஷன் ந நேருல பார்க்கறா மாதிரி இருக்கும். இதுக்கு நடுவுல, ஒரு தாம்பாளத்துல போட் விடுவும், அந்த காலத்துல ஒரு போட் உண்டு, அது உள்ளுக்குள்ள அகல் விளக்கு போட்டு ஏறிய விட்டேள் நா, "பட பட பட பட" நு சத்தம் போட்டுண்டே சூப்பெரா அந்த தாம்பாளத்துக்குள்ள சுத்தி சுத்தி ஓடும். இந்த ஒரு விஷயத்த பார்கரத்துகே எங்காத்துக்கு கூட்டம் வரும். எல்லா பொண்ணுங்களுக்கு முன்னாடி, ஐயா தான் ரயில் ஓட்டி காட்டுவாரு. கண்டிப்பா ஏதாவது ஒரு பொண்ணு, அந்த ரயில எப்படி ஓட வெச்சேன் நு கேள்வி கேட்கும், நானும் இது தான் சாக்கு நு, நல்லா மொக்கைய போட்டு, அந்த பொண்ணுக்கு புரிய வெப்பேன். அந்த பொண்ணும் நான் தான் "ஜார்ஜ் ஸ்டீவென்சன்" ங்கற மாதிரி ஆச்சர்யமா பார்க்கும்.

நா அப்போ பத்தாவது படிச்சுகிட்டு இருந்தேன், மீசை கூட அரை குறையா முளைச்ச வயசு, ஸ்வீட் சிக்ஸ்டீன் நு கூட சொல்லலாம். எப்பவுமே பார்த்தீங்கன்னா, இந்த காத்தாடி சீசனும், கொலுவும் ஒன்னு போல வரும், அப்போ தான் காத்து செட்டில் ஆகி, வானம் அமைதியா இருக்கும். மைலாப்பூர் ல காத்தாடிக்கு மாஞ்சா போடறதுல வித்தகர், சாட்ஷாத் அடியேனே தான், சோ என்ன தேடி பக்கத்துல இருக்கற சேரி லேர்ந்து, நிறைய நண்பர்கள் வருவா, எங்க அப்பாக்கு, நா அவாளோட பழகறது சுத்தமா புடிக்காது. நா அவாளோட பழகினா, கேட்ட வார்த்தை எல்லாம் கத்துண்டுடுவேன் நு அவருக்கு ஒரு பயம், ஆனா இதுல கொடுமை என்ன நா, அவா யாரும் எனக்கு கேட்ட வார்த்தை கத்து குடுக்கல, நல்ல ஸ்கூல் ல படிச்சு, பெரிய பெரிய யூனிவெர்சிட்டி ல பட்டம் வாங்கின மக்கள் தான் எனக்கு "fuck" உம், "shit" உம், "a** ho**" உம் கத்து குடுத்தது. எனக்கு ஆனா அந்த சேரி பசங்களோட தான் பழக புடிக்கும், அவா கிட்ட பணம் காசு இல்லையே தவற, நல்ல மனசு இருந்துது. எங்காத்துக்கு ஒரு சேரி பையன் வந்தா, எங்க பாட்டி அவனுக்கு ஒரு சொட்டு தண்ணி கூட குடுக்க மாட்ட, அதுவே நா அந்த சேரி பையன் ஆத்துக்கு போனா, அவங்க அம்மா எனக்கு உட்கார வெச்சு சோறு போடுவா. யாருக்கு வேணும் பணமும், ஜாதியும் சொல்லுங்கோ ? அந்த சேரி பசங்க கத்துக்குடுத்த பல நல்ல விஷயம் தான் இன்னிக்கு என்ன இந்த நிலைமைக்கு வர வெச்சுருக்கு. ஒகே ரொம்ப தத்துவம் வேண்டாம், நம்ப நேரடியா காமெடி விஷயத்துக்கு வருவோம், சோ நா என்ன சொன்னேன் உங்க கிட்ட ? மைலாப்பூர்லையே காத்தாடிக்கு சூத்திரம் கட்டி, மாஞ்சா போடற எக்ஸ்பெர்ட் இந்த ஐயர் ஆத்து பையனே தான் :)

ஒரு நாள் சாயங்காலம் நா எங்காத்துக்கு வந்துருந்த மாமி's கு, ரயில் ஓட்டி காமிச்சுண்டு இருந்தேன், அன்னிக்கு எங்காத்துல கொண்டகடலை சுண்டலும், ராகி ல பண்ணின ஒரு கேசரியும் செஞ்சுருந்தா. ராகி ல பண்ணின கேசரி, நம்ப ரெகுலர் ஆரஞ் கலர் ல இருக்காது, அது கிட்ட தட்ட, மண்ணுல போட்டு பெரட்டின கேசரி மாதிரி, brown நா இருக்கும். எங்க அதை வரவாளுக்கு எல்லாம் கேசரியும், சுண்டலும் குடுத்துண்டு இருந்தா, நா பாட்டுக்கு செவனே நு ரயில் ஓட்டிண்டு இருந்தேன், அப்போ திடீர் நு வாசல் ல ஒரு அழைப்பு - "ஐயரே ... வூட்ல கீறியா?, நான் முத்து வந்துருக்கேன்" நு, எனக்கு சரியா கேட்டுதோ இல்லையோ, எங்க அப்பாக்கு கெட்டுடுத்து அவனோட அழைப்பு, நா அடிச்சு புடிச்சு வாசலுக்கு போய் அவனுக்கு என்ன வேணும் நு கேட்டேன். "நாளைக்கு P S High School" கிரௌண்டு ல, நம்ப காத்தாடி விட போறோம், அதுனால நீ இந்த வஜ்ரத்த புட்டி(Glass) போட்டு அரைச்சு, இந்த நூல் கண்டு ல மான்ஜாவா தடவி நாளைக்கு கொண்டுட்டு வரியா ? நு கேட்டான், நானும் அதுனால என்ன, போட்டு குடுத்துட்டா போச்சு நு, அந்த காரியத்துக்கு ஒத்துகிட்டேன். வஜ்ரம் நா என்ன நு தெரியாத வாசகர்களுக்கு ஒரு பின் குறிப்பு - வஜ்ரம்ங்கற வஸ்து இஸ் மேட் அவுட் ஆப் 5 பொருள்'s - புளியாங்கொட்டை, லப்பம், கோந்து, மைதா மாவு அண்ட் வெல்லம், இதெல்லாம் போட்டா தான் மாஞ்சா போடும் போது, நூல் கெட்டியா இருக்கும், இது கூட கடைசியா சோடா பாட்டில் அரைச்சு, நல்ல கொழ கொழ நு கிண்டி, ஆவகமா நூல் மேல தடவனும், வஜ்ரதொட காம்போசிஷன் கரெக்கட்டா இல்லாட்டி உங்க காத்தாடி டீல் ஆகறத்துக்கு வாய்புகள் அதிகம்.

அவன் ஏற்கனவே வஜ்ரத்த நல்லா அரைச்சு ஒரு டப்பா ல போட்டு குடுத்துருந்தான், அதா அவசர அவசரமா எங்க அப்பா கண்ணுக்கு தெரியாம, சமையல் கட்டு பக்கத்துல இருந்த மேடைல வெச்சுட்டு நா திரும்பவும் ரயில் விட போயிட்டேன். மணி சுமார் ஒரு 8 இருக்கும், அப்போ தான் என்டெர் ஆனார் எங்க பக்கத்தாத்து 75 வயசு தாத்தா. என்ன பார்த்ததும், நா எப்படி படிக்கறேன், எப்படி படிக்கணும், எவ்வளோ மார்க் வாங்கினா நல்லது, எந்த மாதிரி மேல் படிப்பு படிக்கணும், அது இது நு 1008 விஷயம் பேசினார், எங்க அத்தை ஆத்துக்கு வந்துருந்த மாமிகளோட அரட்டை யா போட்டுண்டு இருந்தா, எங்க அப்பா சும்மா இல்லாம, டேய் தாத்தாக்கு அந்த ராகி கேசரி கொண்டு குடுடா நு சொல்லி என்ன அனுப்பிட்டார், நானும் ஏதோ ஒரு கவனத்துல நம்ப முத்து குடுத்த "வஜ்ரத்துல" ஒரு ஸ்பூன போட்டு, தாத்தா கிட்ட குடுத்துட்டேன், சத்தியமா அது வஜ்ரம் நு எனக்கு அப்போ தோனல. வஜ்ரத்துல வெல்லம் ஜாஸ்த்தியா போட்டுருபான் நு நினைக்கறேன் முத்து, தாத்தா அதோட பல் செட்ட போட்டுண்டு கட கட நு எல்லா வஜ்ரத்தையும் சாப்பிட்டு முடிச்சுடுத்து.

நா ராத்திரி ஒரு பத்து மணிக்கு அந்த வஜ்ரா டப்பா வ தேடறேன், வஜ்ரா டப்பா காணும், எங்க டா நு நானும் தேடி தேடி பார்க்கறேன், கண்ணுல மாட்டல, ஒரு வேலை எங்க அப்பா அதை எடுத்து எங்கயோ ஒளிச்சு வெச்சுட்டாரோ நு நெனச்சேன், அப்பொறம் ஏதோ தண்ணி குடிக்கலாம் நு சமையல் கட்டு உள்ள நுழைஞ்சேன், உள்ள போனா ஒரு பேரதிர்ச்சி, முத்து குடுத்த வஜ்ரா டப்பாவ எங்க அத்தை சுத்தமா அலம்பி கவுத்து வெச்சுருக்கா, ஐயோ, அதை பார்த்த உடனே எனக்கு தெரிஞ்சு போச்சு, நா என்ன காரியம் பண்ணினேன் நு. மரம் நின்னுச்சு, பறவை நின்னுச்சு, அலை மேல அடிச்சு நின்னுச்சு, எரிமலை வெடிச்சு நின்னுச்சு, ஒரு நிமிஷம் என் இதய துடிப்பும் நின்னுச்சு. உடம்பெல்லாம் வேர்த்து போச்சு, இந்த சம்பவம் நடந்து ஒரு 4 மணி நேரமாவது ஆகிருக்கும், இன்னும் பக்கத்தாத்துலேர்ந்து ஒரு அழுகை சதமும் வரலையே, ஒரு வேளை ஆஸ்பத்திரிக்கு தூக்கிண்டு போய்ட்டாளோ, ஒரு வேளை ஆஸ்பத்திரி ல அவர் செத்ததுக்கு காரணம் வஜ்ரம் தான் நு கண்டு புடிச்சுடுவாளோ நு எல்லாம் எனக்குள்ள ஒரே பீதி, நல்ல வேளை, என் பீதி, அடுத்தநாள் அந்த தாத்தா கு பேதி நு சொன்னதுக்கு அப்புறம் தான் அடங்கித்து. ஆமாம், முழுக்க கால் கிலோ வஜ்ரம் சாப்டா பேதி ஆகாம வேற என்ன ஆகுமாம். ஆனா இதுல ஒரு விஷயம் பாருங்கோ, என்னோட வஜ்ரத்த சாப்ட அந்த தாத்தா எப்போ தெரியுமா மண்டைய போட்டார் ? அவரோட 95 வயசுல, ஆகவே, நீண்ட ஆயூள் பெற வஜ்ரம் சாப்புடுங்கோ நு சொல்லறேன் :)
ஏகாந்த மலை ...
இந்த உலகத்தின் சலசலப்புகளை தாண்டி பயணிக்க முடிவெடுத்தான் சரவணன், இயற்கையின் மடியல் தவழ்ந்து விளையாட துடித்தது அவன் மனது. கிடைத்ததை உன்று, வானமே கூரை என்ற மனப்பாங்குடன் பயணம் செய்ய முர்ப்பட்டன். அவன் செய்த முதல் நல்ல காரியம், அவனது அலைபேசியை ஒரு பெரிய பாறையின் இடுக்கில் வைத்து நொறுக்கியது, தன்னை இது நாள் வரை கொடுமைப்படுத்திய அலைபேசியை கொன்ற களிப்பு அவன் கண்களில் தெரிந்தது, உலகில் மனித இனமே கண்டிராத ஒரு வனாந்திரத்தை உலக வரை படத்தில் தேடி கண்டுபிடித்தான், அதை நோக்கி தன பயணத்தை தொடர்ந்தான் சரவணன், நகரத்தில் வாழும் அனைத்து மனிதர்களையும் பார்த்து ஒரு ஏளன சிரிப்போடு தன பின் சுமையை தொழில் ஏற்றிக்கொண்டு விடை பெற்றான் அவன் ...

ஐந்து நாட்கள் ரயிலிலும், பேருந்திலும், மாட்டு வண்டியிலும், போடி நடையாகவும், சுற்றி திரிந்து அலைந்த களைப்பில், ஏகாந்த மலையடிவாரத்தை வந்தடைந்தான் சரவணன், இயற்கைத்தாய் அவனை தன இரு கரங்கள் கொண்டு அவனை வாரி அணைப்பது போல் ஒரு பிரமை தோன்றியது. ஏகாந்த மலை அதன் பெயருக்கு ஏற்ப அழகும் அமைதியும் கொண்ட ஒரு மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 10000 அடி உயரத்தில் உள்ள மலை அது, மனித இனம் இன்னும் கண்டறியாத பல அறிய மூலிகை மரங்களும், உலகம் இதுவரை கண்டறியாத பல அறிய வன விலங்குகளும் வாழும் ஒரு இயற்க்கை பொக்கிஷம் அந்த மலை. அந்த மலையை பற்றி எந்த ஒரு தகவலும் வலை தளங்களில் தென்படவில்லை, அதனாலேயே அவன் ஏகாந்த மலைக்கு வர முடிவெடுத்தான். இனி அவனும் அந்த மலையில் உள்ள இனம் புரியாத ஒரு மௌனமும் தான் நமது கதாபாத்திரங்கள்.

கண்ணில் படும் இடங்கள் எல்லாம் பச்சை நிற போர்வை போத்தியது போல் பசுமை அப்பிக்கிடக்கிறது அந்த மலையில், உயரே செல்ல செல்ல ஒரு மென் குளிர் காற்று நம்மை இதமாக கவ்விக்கொள்ளும், மேலே கருமை நிற முகில்கள் தங்களின் பன்நீர்த்துளிகளை எந்நேரமும் தூவிக்கொண்டே நம்முடன் அலைகிறது, கண்களுக்கு மட்டும் அகப்படாமல் பெயர் தெரியாத பல பறவைகள் தங்களின் குரல் வளத்தில் கட்சேரி செய்த வண்ணம் உள்ளன. வழியெங்கும் காய்ந்த சரடுகளும், உதிர்ந்த இலைகளும், நம் கால்களுக்கு மெத்தை போட்டுத்தந்தன, சற்றே அந்த சருகுகளின் அருகில் சென்று பார்த்தல், அதில் தான் எத்தனை எத்தனை பூச்சிகள் வாழுகின்றன ? செந்நிற வண்ணத்தில் கரு நிற புள்ளிகளுடன் ஒன்று, பச்சை நிற தேகத்தில், மஞ்சள் நிற கோடுகளுடன் ஒன்று, ஆரஞ்சு நிற மேனியில் சிகப்பு நிற தூவல்கள் போட்டு ஒன்று, கரு நிற முதுகில் வெள்ளை நிற சாயம் அடித்த ஒன்று, இவையெல்லாம் நாம் வசிக்கும் நரகத்தில் (நகரத்தில்) பார்த்ததே இல்லையே என்ற வியப்பு சரவணின் கண்களில் தெரிந்தது.

இந்த வனத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது, அது அனுபவிக்க மட்டுமே முடிந்த ஒரு அபரிமிதமான அழகு, அது போன்ற அடர்ந்த காட்டில் எவரும் மனம் மயங்கித்தான் போவார்கள். ஒரு நீள ஒத்தையடிப்பாதை இரு பக்கங்களிலும் வாசனை ததும்பும் மலர் சொரிந்த மரங்களும், காதுகளுக்கு ரீங்காரமாய் அதனருகே கேட்கும் எங்கிருந்தோ வழிந்தோடும் ஓடையின் சலசலப்பும், அந்த ஓடை எங்கு உள்ளது என்று நம்மை தேடத்தூண்டும் ஆவலும் அந்த பயணத்தை சுகமாக்கிக்கொண்டே வருகிறது. இறவன் ஒரு சிறந்த ஓவியன் என்பதில் ஐயமே இல்லை தான், அவரது கைவண்ணத்தில் தான் எத்தனை அழகு, எந்த ஒரு ஓவியனும் அவனது கற்பனையில் கூட கூட்ட முடியாத வண்ணங்கள், அந்த வண்ணங்களுக்கு என்ன பெயர் என்றே நமக்கு தெரியாது. ஒரு மரத்தில் பூத்திருக்கும் ஒரு பூவின் வண்ணம் எப்படி இருந்தது என்றால், பூமி தொடாத பிள்ளையின் பாதத்தையும், சிவந்த தேகம் உள்ள ஒரு அழகி சிரிக்கும் பொது வெட்க்கி பொங்கும் அவள் நாசியின் நுனியில் தோன்றும் வண்ணத்தையும் சேர்த்து பிசைந்து, அதை சுற்றி மஞ்சளும், குங்குமமும் கலந்து, மாலை வேளையில் அஸ்தமனமாகும் சூரியனின் கதிர்களை கைக்குள் அடக்கும் பொது தோன்றும் ஒரு வண்ணத்தை இணைத்து ஒன்றுடன் ஒன்றை கலந்தது போல் இருந்தது

சரவணனின் மனது ஒரு பிறந்த கோழிக்குஞ்சின் இரகைப்போல லேசாகி இருந்தது, இந்த வாழ்கை அவன் மனதிற்கு ஏற்படுத்திய ரணங்களில் குளிர்ந்த அமிலத்தை மயிலிறகு கொண்டு பூசுவது போல் தோன்றியது. தனிமையும் ஒரு சுகம் தான், நம்மை நாமே புரிந்து கொள்ளும் தருணங்கள் அவை, வெளி உலகிற்கு நாம் நம் மேல் போட்டுக்கொண்டுள்ள பொய் முகத்தை நாமே கிழித்தெறியும் நேரம் தனிமையில் தான், வெட்கமின்றி பகிரங்கமாக நமக்கே கசக்கும் பல உண்மைகள் நம் முன் தாண்டவமாடும் தருணங்கள் அவை. சரவணின் மனதும் அவனோடு பயணிக்கும் அந்த காட்டின் மௌனமும் பேசிக்கொள்ள துவங்கின. பிறந்து, படித்து, உழைத்து வளர்ந்தது எல்லாம் "சென்னை" என்ற சலசலப்பிற்கு பஞ்சம் இல்லாத ஒரு நகரத்தில். எவ்வளவு தான் சுட்டெரித்தாலும், "இவ்வளவுதானா ?" என்பது போல் சூரியனையே கேலி செய்யும் வெள்லேந்தி மனிதர்கள் வாழுமிடம். ஆண்டி முதல் அரசன் வரை எவரையும் வாழ வைக்கும் ஈரமான பூமி. நாகரீகம் என்ற பெயரில், தன்னைத்தானே சீரழித்துக்கொள்லாத வைராக்கிய இடம். என் போல் பிள்ளை பூச்சிகளை பந்தாடிப்பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்ட ஒரு நகரம்.

வாழ்கை எனும் சக்கரம் சுழல துவங்கி வெகு நாட்கள் ஆகாத ஒரு திருநாளில், துயரத்தின் முதல் தேன் துளி என் மேல் பட்டு சிதறியது, குடும்பத்தின் ஆணிச்சக்கரம் முருங்கிய நாள் அது, அப்படியே அந்த பாரத்தை என் இளம் தோள்களில் வைத்துவிட்டு உன்னுடன் வந்து கலந்தார் என் தந்தை. போராட பயந்தவன் நானில்லை தான் என்றாலும், போராட்டம் நீடித்ததால் மனம் தளர்ந்தேன், துவண்டு போன காலங்களில் தோள் சாய இடமில்லாமல் தலையணைக்குள் சிந்திய கண்ணீர்த்துளிகளை பிழிந்தால் பொங்கிவிடும் வங்கக்கடல். பாழாய்ப்போன வயிற்றையும் அதனுடன் பசி என்ற கொடிய அரக்கனையும் இறைவன் படைத்ததற்காக அவர் மேல் கோபம் கொண்டு கோவிலுக்கு செல்ல மறுத்தவன் நான். பசி என்ற அரக்கன் என்னை சுற்றி இருந்த அனைவரையும் அதன் பசி தீர உண்டு முடித்து, என்னையும் அது விழுங்கும் முன், இதோ உன்னுடன் நான். வாழ்க்கை என்னை துரத்தியதால் நான் உன்னைத்தேடி இங்கு வரவில்லை, என்னை துரத்திய ஒன்றை துரத்திப்பிடிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

இருவரின் உரையாடலையும் ஒரு கணம் கலைத்து விட்டு சென்றது, தூரத்தில் கேட்ட ஒரு யானையின் பிளிறல், அந்த பிளிறல் வந்த திசை நோக்கி கண்களை ஏவ விட்டான் சரவணன், பல மரங்களின் இடுக்கின் வழியாக ஒரு சிறு குட்டை போல தெரிந்தது அந்த ஆறு, அதனருகே நீராடி மகிழ்ந்து கிடந்தது ஒரு யானை குடும்பம். குளிர் காற்றும், அஸ்தமிக்கும் சூரியனும் அந்த காட்டின் அழகை மேலும் கூட்டியிருந்தது, அந்த மஞ்சள் நிற கதிகள் இலைகளின் நடுவே கசியும் அழகை பார்த்து ரசிப்பதற்கு கண் கோடி வேண்டும். அந்த காடுகளில் கரையும் அந்த பசுமை வாசத்தில், நம் நாசிக்குள்ளும் செடிகள் வளரும் பரவசம் ஏற்படுகிறது. அந்தி சாயும் நேரம் என்பதால், பகல் முழுதும் இறை தேடி பறந்து திரிந்த பறவைக்கூட்டங்கள் தங்களின் கூடு நோக்கி சென்று கொண்டிருந்தன. கண்களுக்கு மட்டும் அகப்படாத இசை கலைஞர்கள் அவர்கள். இளையராஜாவும், ஏ ஆர் ரஹ்மானும் இவர்களிகம் கற்றுக்கொள்ள பல ராகங்கள் உள்ளன, அவை எனக்காகவே பாடிக்காட்டியது போல் ஒரு உணர்வு என்னுள்ளே.

அலைந்து திரிந்த களைப்பில், நான் படுத்து உறங்க முடிவெடுத்த இடம் ஒரு கொய்யா பழ மரத்தடியில், நகரத்தில் வாழ்ந்த காலங்களில், உப்பும், மிளகாய்ப்பொடியும் இலாது ஒரு கொயாக்கனியை நான் உண்ட கவனம் எனக்கில்லை. கவனமாக தேடிப்பிடித்து நான் பறித்து ஒரு அணில் கடித்த பழத்தை, அதை கடித்தது அணிலோ, குரங்கோ என்று சரியாக தெரியாது, எனினும், அந்த பழம் வழக்கத்தை விடவும் சுவை மிகுந்ததாகத்தான் இருந்தது, வயிறு முட்ட பழங்கள் உண்ட பரவசத்தில் கண்ணசந்து போனான் சரவணன். வாழ்கையின் கோரப்பிடியில் இருந்து தப்பித்த களிப்பில் மீண்டும் அந்த காட்டின் மௌனத்தை ஆசை தீர அனுபவித்தான் சரவணன், தன்னை வாட்டி எடுத்த வாழ்கையை வென்றுவிட்ட பெருமிதம் அவன் முகத்தில். அந்த வனத்தில் ஈரமில்லாத ஒரு இடத்தை தேடுவது முட்டாள் தனம் என்று தோன்றியது அவனுக்கு. இயற்கை அன்னை அவள் மார்பகத்திலிருந்து வற்றாமல் சுரக்கும் வெண்ணிற அருவியை கண்டான் சரவணன், ஒரு கணம் அந்த பிரம்மிப்பில் தன்னை மறந்தான். நேற்று முதல் அதன் ஒலியை மட்டுமே கேட்ட அவன் காதுகள், இன்று அந்த பிரம்மாண்டத்தை அவன் கண்களும் சுவைத்தது

உலகில் எவரும் இதுவரை அந்த அருவியை கண்டிருக்க இயலாது, ஏன் தெரியுமா ? அங்கு தான் தூக்கி எறியப்பட்ட சந்திரிகா சோப்பு பெட்டிகளோ, மூக்கு வெட்டப்பட்ட ஷாம்பூ கவர்களோ இல்லையே. தானும் இந்த உலகில் ஒன்றை கண்டுபிடித்த சந்தோஷத்தில் தத்தளித்தது அவன் மனது, தன் வாழ்வின் பாவங்களை துடைக்க அதை விட ஒரு சுத்தமான நீர் கங்கையிலும் கிடையாது என்றுணர்ந்து, மூக்கடைத்து அந்த வழுக்கும் பாறைகளில் அமர்ந்து, குளிருக்கு புது விளக்கமளிக்கும் அந்த அருவியில் கண்மூடி கிடந்தான் சரவணன். அவன் வாழ்கையின் முன்னோட்டம் அவன் மனத்திரையில் ஓட துவங்கியது. அவன் பிறந்தது முதல், அவன் வாழ்கை கடந்து வந்த பாதைகளும், அதில் அவனை தீண்டிய கூர் முட்களும் ஒரு திரைப்படமாய் ஓட துவங்கின, அப்பொழுது வீசும் தென்றலாய் அவன் மனத்திரையில் தோன்றினாள் "ரேவதி" அவன் வாழ்வின் ஒரே விடிவெள்ளி, அவனை அவனுக்காக நேசித்த ஒரு ஜீவன், அவளுடன் அவன் வாழ்ந்த வசந்த காலங்களை நினைக்கையில், தண்ணீரின் குளிர் மேலும் அதிகரித்ததை அவனின் நடுங்கும் புஜங்கள் ஊர்ஜீனம் செய்தன

அந்த அருவியின் சாரல்கள் பாறைகளில் தெறித்து வெண் புகையை காற்றில் கலந்தது, அந்த நீர்த்துளிகளின் சிதரளைப்போல ரேவதியின் நினைவும் அவனுள்ளே சிதறிப்போனது அந்த ஒரு சொல் அவன் நினைவில் நுழைந்த பொழுது "சோத்துக்கே வக்கில்லாத உன்ன கட்டிக்கிட்டு என்ன சொகத்த காண போறேன்", அவன் தலையில் விழுந்து கொண்டிருந்த அருவியின் கணத்தை விட அந்த சொல்லின் கணம் அவன் இதயத்தை பிளந்தது, இதுநாள் வரை அவனை துரத்திய அந்த தனிமை எனும் அரக்கனை தேடி, வழுக்கும் பாறைகளில் மெல்ல நடந்து, அருவியின் ஓர் உச்சியில் தன் இரு கைகளையும் விரித்து, தனக்கு சந்தோஷத்தை அளித்த அந்த ஏகாந்த மலைக்கும், அங்கே வாழும் பறவை இனங்களுக்கும், சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு, அருவியின் காற்றோடு ஒன்றாய் கலந்தான் சரவணன், அவனை துரத்திய தனிமையோடு ஒன்றாய் கலந்தது அவன் உயிர். அந்த நிகழ்வையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது ஏகாந்த மலை
முட்டாளின் வயது 32 ...
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழவேண்டும்...

நான் என் வாழ்வில் என்றுமே மறக்காத கண்ணதாசனின் வைர வரிகள். இந்த வரிகளின் அர்த்தத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும் என்று என்னை ஆசீர்வதித்து இறைவன் இந்த பூமியில் என்னை ஜனிக்கவைத்து இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நான் பெரிதாக எதுவும் என் வாழ்வில் சாதிக்கவில்லை ஆனால் இன்று நான் வாழும் இந்த வாழ்வே, இறைவன் எனக்களித்த பெரிய பிச்சை என்றே சொல்லுவேன். நான் அனுபாவிக்கும் பல சந்தோஷங்கள், என் தகுதிக்கு மேற்பட்டது என்றே எண்ணுகிறேன். அமைதியான வாழ்கை, நிறைவான செல்வம், அன்பான குடும்பம், எதிர்பார்த்த வேலை, பாசமிகு நண்பர்கள், வாழ்வின் இந்த நிறைவோடு, இந்த கணமே மூர்சையாகவும் தயார்.

வாழப்போகும் சொல்ப காலத்திற்கு, என்னை செதுக்கிய இந்த சமுதாயத்திரிக்கு ஏதேனும் நல்லது செய்யா வேண்டும் என்று விரும்புகிறேன், என் மறைவிற்கு பின், வெறும் புகைப்படமாக மாறி, புகை ஏறிய சுவற்றில் தொங்கிக்கொண்டு சிரிப்பதற்கு நான் தயாராக இல்லை, என் பெயர் சொல்லும் விதமாக இந்த சமுதாயத்திற்கு என்னால் இயன்ற சில நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நான் இறைவனிடம் வேண்டும் ஒரே வரம் இது தான், நான் இருக்கும் வரையில், என்ன சுற்றி உள்ள நல்ல உள்ளங்கள் அனைத்தையும், சிரிக்க வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான். கடவுள் மனிதனுக்கு மட்டுமே அள்ளித்தந்த மாபெரும் பரிசு, சிரிப்பு, ஆங்கிலத்தில் "It is not an easy joke" என்பார்கள், சக மனிதனை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமானதொரு செயல், அதுவும் இன்று நாம் வாழும் காலகட்டங்களில், மனிதன் தனக்கிருக்கும் தனித்துவமான அந்த பண்பை மறந்தே போனான் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. நம் வாழ்கை, சவப்பெட்டிகளை விடவும் புழுக்கமாக இருக்கிறது என்பது தான் கசப்பான ஒரு உண்மை.

என்னையும், என் எழுத்துக்களையும் எப்போதும் ஊக்குவிக்கும் என் குடும்பத்தாருக்கும், முக்கியமாக என் நண்பர்களுக்கும், என்னை பார்க்காமலே என் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் என் அருமை வாசகர்களுக்கும் நான் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அனைவரின் தினசரி பிரார்த்தனைகளில் என்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், உங்களின் அன்பும் ஊக்குவிப்பும் இல்லாவிட்டால், நான் இந்த அளவிற்கு என் எழுத்துத்திறனை வளர்த்திருக்க இயலாது.

எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன், என் முதல் தமிழ் இணையதளத்தை துவங்குகிறேன், இதை செய்ய ஏன் என் பிறந்த நாளை தேர்ந்தெடுத்தேன் என்று கேட்கும் உள்ளங்களுக்கு என் பதில் இது தான், நான் பிறந்ததற்கும் ஒரு சாட்சி வேண்டும் அல்லவா ;-) மேலும் பல சுவையான பதிவுகளுடன் உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள வருகிறான், இந்த மைனர்குஞ்சு. வாழ்க்கை என்பது ஒரு காகித கப்பலைப்போன்றது, சோகம், துக்கம், துயரம், கவலை போன்ற பயணிகளை ஏற்றாமல் இருக்கும் வரைத்தான் அது ஆடி ஆடி நீந்திச்செல்லும், அவற்றில் ஒன்றை ஏற்றினாலும், அது மூழ்கிவிடும்.

சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்கவும் வாழவேண்டும் ... சிரியுங்கள், பெரிதாக ஒன்றும் செலவாகாது ... :-)
உளறுகிறேன் ...
பிறந்து முப்பத்திரெண்டு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருகின்றேனோ, அதையே இந்த வலை தளத்தின் முதல் பதிவாக சமர்பிக்கிறேன். உளறுவது ஒரு கேலிக்குரிய விஷயமாக கருதப்பட்டாலும், உளறுவது மிக கடினமான ஒரு செயல், எல்லாராலும் எளிதாக உளர இயலாது, உளறுவது ஒரு கலை. நம்ப மருப்போர்களுக்கு இந்த வலைதளமே சாட்சி. இதில் நான் உளறுவதற்கு எவ்வளவு சிரமபட்டுள்ளேன் என்று நீங்களே அறிவீர்கள். உன் வலை தளத்திருக்கு வருகை தருவதால் எனக்கென்ன பயன் என்று வினைவோருக்கு, சில தகவல்கள்.

தன்னம்பிக்கை குறைவாக இருப்பவரா நீங்கள் ? என் வலை தளத்திற்கு வருகை தந்தால் - மைனர்குஞ்சு போன்ற முட்டாளே இந்த உலகில் வாழும் பொழுது, நான் ஏன் வாழக்கூடாது என்ற உற்சாகம் பிறக்கும்

சோகத்தில் மட்டுமே வாழ்பவரா நீங்கள் ? என் வலை தளத்திற்கு வருகை தந்தால் - மினர்குஞ்சுவின் கேலியான தமிழ் உரைநடை உங்கள் கவலைகளை மறக்க செய்யும்

வாழ்கையின் பயன் என்ன என்று தெரியாமல் அலைபவரா நீங்கள் ? - என் வலை தளத்திற்கு வருகை தந்தால் - மினர்குஞ்சு போன்ற அற்ப பதர்களே வாழ்கையின் பயனை பற்றி பேசும் பொழுது, நாமும் ஏன் பேசக்கூடாது என்று உங்களையும் ஒரு வலை தளம் இயற்ற தூண்டும்.

கவலை என்பதே என்ன என்று தெரியாதவர்களா நீங்கள் ? - என் வலை தளர்திர்க்கு வருகை தந்தால் - இப்படி எழுதியே பல தமிழ் நெஞ்சங்களை இந்த மைனர்குஞ்சு கொல்கிறானே என்ற புது கவலை உங்கள் மனதில் பதியும்.

இப்படி பல நன்மைகளை கருதித்தான், உங்கள் அனைவரையும் சோதிக்க கிளம்பி இருக்கிறான் இந்த மைனர்குஞ்சு. இங்கே என் நெஞ்சத்தில் உதிக்கும் மோசமான முதல், மிக மோசமான கதைகளையும், கவிதைகளையும், நகைச்சுவைகளையும் பதிவு செய்ய உள்ளேன். இது முற்றிலும் என் தமிழின் எழுத்துத்திறனை அதிகரித்து கொள்வதற்கே உருவாக்கப்பட்ட வலைத்தளம். தமிழ் மேல் பற்று கொண்ட அனைத்து நெஞ்சங்களும், எனது பதிவுகளின் எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.